வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்கப்பேனாவை பரிசளித்த கவிஞர் வைரமுத்து.!
வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்கப்பேனாவை பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பலரும் மாணவி நந்தினி வாழ்த்துக்களை குவித்து வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தங்கப்பேனா பரிசு:
அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினியை, நேரில் சந்தித்து தங்கப்பேனாவை பரிசளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் கவிஞர் வைரமுத்து.
மேலும், நந்தினிக்கு தங்க பேனா வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, மறுத்தேர்வு எழுதி, அதில் யார் மாநில அளவில் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கும் பரிசு தருவோம் என்று உறுதி அளித்தார்.
விருது பெற்ற நந்தினி:
ஆளுநர் மாளிகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, இந்த நிகழ்வில் தமிழகத்தில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு அவர் விருது வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.