அன்புமணி நீக்கம்., “ஜனநாயக படுகொலை?” பாமகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!
பாமக தலைவராக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டு தானே தலைவர் என டாக்டர் ராமதாஸ் அறிவித்ததற்கு பாமக பொருளாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அன்புமணி ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், தற்போது பாமக தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தானே தலைவர் பொறுப்பை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ” 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு செயல் திட்டங்கள் உள்ளன. அதனை செயல்படுத்த கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் பாமக நிறுவனர் என்ற முறையில் நானே பாமக தலைவர் பொறுப்பை எடுத்துக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றிக்கு அயராது உழைக்கும் அன்புமணி ராமதாஸ் பாமக செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். ” என ஒரு பரபரப்பான அறிவிப்பை அறிவித்தார்.
தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படும் இந்த அறிவிப்பானது, பாமக கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என்றே பார்க்கப்படுகிறது. மேலும் பாமக தலைவர் பொறுப்பை அன்புமணியிடம் இருந்து நீக்கியதற்கு பாமக கட்சியில் அன்புமணி ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்புகளை பலமாக பதிவு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே திண்டிவனம் பகுதியில் பாமக அன்புமணி ஆதரவாளர்கள் , அன்புமணியை தலைவர் பதவியில் நீக்கியதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேபோல கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பாமக பொருளாளர் திலகபாமா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்ட முடிவானது தவறானது. பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் ஐயா இதுவரை எடுத்த எல்லா முடிவுகளும் சரிதான். ஆனால், இந்த முடிவு தவறு!” என தெரிவித்துள்ளார்.