“எங்கள் குல தெய்வம் அண்ணாமலை?” பாமக எம்எல்ஏ பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!
பாமக எம்எல்ஏ மேட்டூர் சதாசிவம் சட்டப்பேரவையில் பேசுகையில், எங்கள் குலதெய்வம் அண்ணாமலையார் என கூறியதை அண்ணாமலையா என கேட்டு சிரித்துவிட்டனர்.

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் (எம்எல்ஏக்கள்) கேள்விகளுக்கும், தொகுதி சார்பான கோரிக்கைகளுக்கும் துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அதில், இன்று பாமக எம்எல்ஏ மேட்டூர் சதாசிவம் வருவாய்த்துறை மானிய கோரிக்கையில் பங்கேற்று தனது கோரிக்கையை முன்வைத்தார். அப்போது அவர் தொடங்கும் போது, எங்கள் குலதெய்வமாகிய அண்ணாமலையாரை வணங்கி எனத் தொடங்கினார். அப்போது அவையில் இருந்த சக உறுப்பினர்கள் குலா தெய்வம் அண்ணாமலையாரா அல்லது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையா? என கேட்கவே அவையில் சிரிப்பலை எழுந்தது.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாமக எம்எல்ஏ, நான் எங்கள் குலதெய்வம் அண்ணாமலையாரை தான் குறிப்பிட்டேன் அண்ணாமலை இல்லைங்க என தனது கோரிக்கையை அவையில் குறிப்பிடத் தொடங்கினார். நகராட்சி பிரதிநிதிகள் கூட அவர்கள் தங்கள் பகுதிக்கு செல்ல அரசு வாகன வசதி உள்ளது. ஆனால், எம்எல்ஏக்களுக்கு அரசு கார் இல்லை எனக் கூறி எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.