NDA கூட்டணியில் பாமக இருக்கா.? இல்லையா.? அன்புமணி பதில் என்ன?
NDA கூட்டணியில் பாமக இருக்கிறதா என்ற கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி பதில் அளிக்காமல் சென்றுள்ளார்.

சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளதாக கூறப்படும் பாமக தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என பாமக மூத்த நிர்வாகி ஜி.கே.மணி முன்னதாக கூறியுள்ளார்.
இப்படியான சூழலில் இன்று, பாமக மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் பகுதியில் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்த பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ் மாநாடு பற்றி கூறினார்.
அவர் கூறுகையில், மருத்துவர் ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெற உள்ளது. அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் இந்த சித்திரை விழா மாநாடு நடைபெறும் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
அப்போது, NDA கூட்டணியில் பாமக இருக்கிறதா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அன்புமணி, ” நன்றி., இந்த கேள்விக்கு எல்லாம் நான் இன்னொரு நாள் பதில் சொல்கிறேன்.” என பதில் கூறாமல் சென்று விட்டார்.அன்புமணியின் இந்த பதில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணியை தவிர்த்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. 2021 தேர்தலில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக NDA கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதில் பாமக இருக்கிறதா என்ற கேள்விக்கு அன்புமணி பதில் அளிக்காமல் சென்றது உற்றுநோக்கப்படுகிறது.