“அதிகரித்த சேதம்;கூடுதல் இழப்பீடு தர வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் !

Default Image
தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட  பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல என்று உழவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கூடுதல் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய உழவர்களுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத கனமழையை எதிர்கொண்டு வருகின்றன. சென்னையிலும், கடலூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மில்லி மீட்டருக்கும் கூடுதலான மழை பொழிந்துள்ளது. காவிரி டெல்டாவிலும் பருவ மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த 15&ஆம் தேதி வரை பெய்த மழையில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 68,000 ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்ததாக அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அமைச்சர்கள் குழு அறிக்கை அளித்திருந்தது.
பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடும் வழங்கப்படாத நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையில் இன்னும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.
கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட தண்ணீரும், நீர்நிலைகளின் கரைகள் உடைந்ததால் பெருக்கெடுத்த தண்ணீரும் பயிர்களை மூழ்கடித்து விட்டன. இம்மாதத் தொடக்கத்தில் பெய்த மழையில் ஓரளவு பாதிக்கப்பட்டு, காப்பாற்றி விட முடியும் என்ற நிலையில் இருந்த பயிர்களும் கூட இப்போது பெய்த மழையில் முற்றிலுமாக அழுகி சேதமடைந்து விட்டன. இடைப்பட்ட காலத்தில் புதிதாக பயிரிடப்பட்ட சம்பா பயிர்களும் கூட வெள்ள நீரில் மூழ்கி விட்டன. அந்தப் பயிர்களை இனி காப்பாற்ற முடியாது என்பதால் உழவர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள உழவர்களால் முதன்மையாக சாகுபடி செய்யப்படும் பருவம் சம்பாப் பருவம் தான். கடந்த ஆண்டு பருவம் தவறி ஜனவரி மாதம் வரை செய்த மழையால் சம்பா நெற்பயிர்களும், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்ட போதிலும் அது உழவர்களின் பாதிப்பை முழுமையாக போக்கவில்லை. நடப்பு சம்பா பருவ நெற்பயிர்களை வெற்றிகரமாக அறுவடை செய்தால் தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியும் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் அடுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆய்வும், கணக்கெடுப்பும் மேற்கொள்ள வேண்டும். அதன்படி எவ்வளவு ஏக்கரில் நெற்பயிர்களும், பிற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைத் தீர்மானித்து உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அதேபோல், சேதமடைந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தால் அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.8000 இழப்பீடும், சம்பா பயிர்களை மறுநடவு செய்வதற்காக ரூ.2415 மதிப்புள்ள விதை மற்றும் உரங்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது போதுமானதல்ல. நெல் சாகுபடிக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்து விட்ட நிலையில், அதற்கேற்ற அளவில் இழப்பீடு உயர்த்தி வழங்கப்படுவது தான் நியாயமானதாக இருக்கும். எனவே, மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’,என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala