ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?
பொதுக்குழு கூட்டத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி அவரை சமாதானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தின் போது ராமதாஸ் புது இளைஞரணித் தலைவர் பொறுப்பு தனது மகள் வழிப் பேரன் முகுந்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அன்புமணி அவர் கட்சியில் சேர்த்து 4 மாதங்கள் தான் இருக்கும். எனவே, அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? வேறு அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இந்த பதவியை கொடுக்கலாமே” என கேள்வி எழுப்பினார். இதனால், கடுப்பான ராமதாஸ் கட்சியை நிறுவியது நான் தான். நான் சொல்வதை தான் கேட்கவேண்டும். ஏனென்றால், இது நான் உருவாக்கிய கட்சி. இப்போது மீண்டும் சொல்கிறேன். இளைஞரணித் தலைவர் பொறுப்பு முகுந்தனுக்கு தான்” என கூறினார்.
உடனடியாக அன்புமணியும் கையில் வைத்திருந்த மைக்கை கோபத்துடன் சரி..சரி என்று தலையை அசைத்துக்கொண்டு கீழே வைத்தார். அதன்பிறகு எழுந்து பனையூரில் தனக்கு தனி அலுவலகம் இருக்கிறது. இனிமேல் தொண்டர்கள் அனைவரும் அங்கு வந்து என்னை பாருங்கள்” என அறிவித்துவிட்டு கோபத்துடன் சென்றார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தைலாபுரத்தில் பாமக தலைவர் ராமதாஸ் உடன் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த ஆலோசனையின் போது அன்புமணியை சமாதானம் செய்ய முடிவும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை ஏற்பாடு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாகவும், நாளை அன்புமணியை நேரில் அழைத்து இது தொடர்பாக பேச முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.