சமூக நீதி.. இலவசங்கள்… பிரதமர் மோடியின் தோல்வி பயம்.! கீ.வீரமணி விமர்சனம்.!

PM Modi - K Veeramani

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா என 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் முழுவதும் நடைபெற்று வருகிரியாது. ஏற்கனவே , சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தலும், மிசோராமில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ளது. அடுத்து ராஜஸ்தான் , தெலுங்கானா தேர்தல்கள் நடைபெற உள்ளன .

இந்த தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி மிசோராம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் மோடியின் பிரச்சாரம் பற்றியும், சட்டமன்ற தேர்தல் பற்றியும் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இம்மாத இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைய இருக்கின்றன. சில மாநிலங்களில் தேர்தல் தொடங்கி ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்டமும் தொடங்கும் நிலை உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து அம்மாநிலங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில், “காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். “கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்தே தீரும்” என்பதுபோல, முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் நிலையில், அது உண்மையா? அல்லது வாக்குப் பெறுவதற்கான பேச்சா என்பது அன்று நாட்டிற்குத் தெரிந்துவிடும் என்பது உறுதி!

ஐந்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டு என்று இளம் தலைவர் ராகுல் அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்! கர்நாடகத்தைப்போல, இந்த மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்கிறார் ராகுல். பா.ஜ.க.வுக்கு வாக்குகளைச் சேர்த்துத் தருவதில் மோடிக்கு நிகரானவர் எவருமில்லை என்பது, கடந்த சில காலம் முன்பு நடந்த (கர்நாடகத் தேர்தல் உள்பட) தேர்தல்கள் வரை, அரசியல் வட்டாரங்களில் நிலவிய கருத்து, இப்போது தலைகீழாக வருகிறது ஆர்.எஸ்.எஸ் அறிந்த ஒன்று. மிசோரம் மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி நேரில் போகாமல், வெறும் காணொலி செய்தி மூலமே பிரச்சாரம் செய்தார்! காரணம் வெளிப்படையாகவே அரசியல் விவரம் அறிந்தவர்களுக்குப் புரியும்.

தேர்தல் அறிவிப்பு இலவசங்களால் நாடே குட்டிச்சுவராகி விட்டது என்று கூறிய பா.ஜ.க, அதன் தலைவர் – இப்போது மற்ற அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவித்து வருகிறார். இதுவரை கவலைப்படாத சமூகநீதி பற்றி உரக்கப் பேசுகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர், ஒடுக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு பற்றிப் பேசாத மத்திய பா.ஜ.க அரசு, EWS என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஐந்தே நாட்களில் அரசமைப்புச் சட்டத் திருத்தமாகக் கொண்டு வந்து, வித்தை காட்டியது; இப்போது சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர், பெண்கள் இட ஒதுக்கீடுபற்றி புதிய மோகம் பிடித்து, ஓட்டு வேட்டை ஆடும் நிலை ஏற்படுகிறது என்றால், தோல்வி பயம் உலுக்குகிறது பா.ஜ.க.வை என்பதுதானே உண்மை.

எல்லாவற்றையும் விட வட மாநிலங்களும் கூட தங்களை விட்டுப் போய்விடும் என்பதால்தான் கடைசியாக இராமன் கோவிலைக் காட்டியாவது பக்தி மயக்க பிஸ்கெட்டைத் தேடும் நிலை உள்ளது! எதிர்க்கட்சியினருக்கு எதிராக அமலாக்கத் துறையின் முற்றுகை, வழக்குகள் என்ற அடக்குமுறை இப்படி பலவகை அஸ்திரங்களை இப்போது கையாளும் பரிதாப நிலை! வடபுல மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள் என்பதை இந்த 5 மாநிலத் தேர்தல்கள் நிச்சயம் உலகுக்கு உணர்த்தும் என்றுதான் அரசியல் நோக்கர்கள், பொது நிலையாளர்கள் கணிக்கிறார்கள்.

பாஜகவுக்கு தென்னாடு அதன் கதவைச் சாத்திவிட்டது; வடபுலமும் அதைப் பின்பற்ற ஆயத்தமாகுமா என்ற கேள்விக்கு டிசம்பர் 3 ஆம் தேதி விடை கிடைக்கும் அரசியல் களத்தில். அதனால்தான் தேர்தல் விதிக்கு முரணாக சில திடீர் அறிவிப்புகள்கூட இலவசங்களாக வந்துள்ளன – கடைசிநேர ஊசிகள் போல்! பா.ஜ.க.வினைப் புரிந்து கொள்ளலாம். மக்கள் விழிப்படைவார்கள் – விழிப்படைய வேண்டும் என்று நம்புகிறோம் என திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்