விவசாயிகள் வாழ்க்கையில் பிரதமர் ஒளியேற்றியுள்ளார் – சசிகலா..!

Default Image

இந்த தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில், ஒளியேற்றிய நம் பிரதமருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி என சசிகலா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சசிகலா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நம் இந்திய பிரதமர், நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக அனைத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, எந்தவித அரசியல் கௌரவமும் பார்க்காமல், பெருந்தன்மையோடு, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளதற்கு, தமிழக மக்களின் சார்பாக, முதற்கண் என் நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக விவசாயிகளும், பிற மாநிலங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கடந்த ஒரு வருட காலமாக போராடினார்கள். இந்த போராட்டத்தில், எவ்வித சாதிமத பேதமில்லாமல், மொழி வேறுபாடின்றி, ஒருமித்த கருத்தோடு, ஒன்றிணைந்து, போராடிய விவசாயிகளின் கோரிக்கை இன்று ஏற்கப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகவும் வரவேற்கப்படவேண்டியது ஆகும்.

எங்கள் ஆசான் புரட்சித்தலைவர் பாடிய,

“கடவுள் என்னும் முதலாளி

கண்டுடெடுத்த தொழிலாளி விவசாயி”

என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளதுப் போன்று,

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”

“ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்

உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”

என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக, உலக நாடுகள் எல்லாம் திரும்பி பார்க்கும் வகையில், நம் இந்திய திருநாட்டில், வேளாண்மையில் புதிய புரட்சி ஏற்பட்டு, விரைவில் வல்லரசாகும் என்பது உறுதி. நம் புரட்சித்தலைவியும், இதே கொள்கையை மனதில் வைத்து விவசாயிகளின் உரிமைகளுக்காக, தன் இறுதிமூச்சு வரை போராடினார் என்பதை. இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.

மேலும், விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி விவசாய துறையில் நிலவும் இடர்பாடுகள் களையப்படும் என்று நம் பிரதமர் குறிப்பிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே சமயம், கடந்த ஓராண்டாக நடைபெற்ற போராட்டங்களில், தங்கள் இன்னுயிரை நீத்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மேலும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தீபத்திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில், ஒளியேற்றிய நம் பிரதமருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்