கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான பிளாட்டினம் சான்று ….!
தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான பிளாட்டினம் சான்று வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ 1 தர மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ரயில் நிலையங்கள் பசுமை சான்றிதழ் பெற வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், மதுரை, கோவை, கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்கள் ஏ 1 தரம் பெற்றவை தான்.
இவற்றில் முதல் முறையாக கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான பிளாட்டினம் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஐஜிபிசி ரயில் நிலையங்களை ஆய்வு செய்து பசுமை சான்றிதழ் வழங்கி வருவதாகவும், அவ்வாறு சான்று பெறுவதற்கு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நிரந்தர வசதிகள், ரயில் நிலைய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, நடைமேடையில் மின்சாரத்தை சேமிக்கும் எல்இடி விளக்குகள், மின்விசிறிகள், கழிவுநீர் மறுசுழற்சி மையம், மேற்கூரையில் வெப்பத்தை தணிக்கும் வண்ணப்பூச்சு ஆகியவை இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் கோவை ரயில் நிலையத்தில் உள்ளதாகவும், மேலும் கோவை ரயில் நிலைய வளாகத்தில் 100 மரக்கன்றுகள் மற்றும் செடிகளும் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அனைத்து விதிமுறைகளும் கோவை ரயில் நிலையத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் ஐஜிபிசி அதிகாரிகள் இந்த ரயில் நிலையத்தை ஆய்வு செய்து தற்பொழுது பிளாட்டினம் சான்று வழங்கி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.