தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்.!

நாளை(மார்ச் 22) நடைபெறும் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. 2026ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது.

அதற்கு மாறாக, மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அரசியல் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கவலை எழுந்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும், நாளை சென்னையில் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். அதன்படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களின் முதல்வர்களுக்கும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்த அழைப்பை ஏற்று பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், முதல் ஆளாக தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை தந்துள்ளார். அவருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்பு அளித்தனர். இது, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பையும், இந்த பிரச்சினையில் ஒருமித்த நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.

இந்த கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முன்முயற்சியால் நடைபெறும் இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், தொகுதி மறுவரையறை தொடர்பான சர்ச்சைக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்