பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்!
குற்றவாளிகளை காக்க காவல்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கியதில் இருவர் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர் எனவும், இந்தத் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யாமல், பாதுகாக்க காவல்துறை முயன்று வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதான இந்தக் கொடியத் தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாதிவெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சாப் புழக்கமும் தான் காரணம் ஆகும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபடுவதும், தாக்குதல் நடத்துவதும் இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்வாய் கிராமத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த மக்களின் சொத்துகளை சூறையாடினர்.
அதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது. சில ஆண்டுகள் கட்டுக்குள் இருந்த அவர்களின் அட்டகாசம் இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. திருமால்பூர் பகுதி உள்பட இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இத்தகைய வன்முறைகள் அடிக்கடி நடப்பதற்கு அங்கு கட்டுப்பாடில்லாமல் நடைபெறும் கஞ்சா வணிகமும் முக்கியக் காரணம் ஆகும்.
கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வருகிறது. ஆனால், கஞ்சா வணிகம் இன்று வரை கட்டுப்படுத்தப்படாமல் தொடருகிறது. பா.ம.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கிய 6 பேரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறை, அவர்களில் பிரேம் உள்ளிட்ட இருவரை மட்டுமே கைது செய்துள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வணிகத்தை ஒழிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் சாதிவெறி சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் காட்டத்துடன் ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பா.ம.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவர் உயிருக்கு போராட்டம் – குற்றவாளிகளை
காக்க காவல்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது!இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை…
— Dr S RAMADOSS (@drramadoss) January 17, 2025