ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு – அண்ணாமலை கண்டனம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிக பாதுகாப்பு இருக்கும் ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷமிட்டதாக தகவல் வெளியானது.
கைது செய்யப்பட்ட வினோத்திடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிய கருக்கா வினோத், நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது என கூறியிருந்தார். கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு.! ஒருவர் கைது.!
சிறையில் இருந்து வந்த உடனே மீண்டும் அவரது கைவசத்தை காட்டியுள்ளார். அதுவும் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். குண்டு வீசியது ஏன் என்று கேட்டதற்கு சிறையில் இருந்த போது வெளியே வருவதற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தால் குண்டு வீசியதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத், சாதாரணமாக நடந்து வந்தே பெட்ரோல் குண்டு வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தற்போது, ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கண்ணாடி துண்டுகளை சேகரித்து தடவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், இன்றைய சம்பவம் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கு என்ன என்பதை பிரதிபலிக்கிறது. மக்களின் கவனத்தை முக்கியமற்ற விஷயங்களில் திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருவில் இறங்கிவிட்டனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தைத் தாக்கிய அதே நபர்தான் இன்று ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. மேலும், முதல்வர் முக ஸ்டாலின், எப்பொழுதும் செய்வது போல் அடுத்த திசை திருப்பத்திற்கு தயாராகி வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.