தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கிய மனு… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையிடு மீதான விசாரணை இன்று வருகிறது.
அமலாக்கத்துறையால் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகார் வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி, சோதனைக்கு அழைத்துச் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இதயத்தில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவர் கடந்த 15 ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இன்று காலை அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் வேண்டுகோளை நிராகரித்த கோடைகால நீதிபதிகள் அமர்வு, இன்று விசாரிப்பதாக தெரிவித்தது. இதன்படி இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அமர்வுக்கு வருகிறது.