மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி மனு தாக்கல்! தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!
2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படுமா? அமல்படுத்தப்படாதா? என பிப்ரவரி 3-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், பெருமாள் பிள்ளை, நளினி, தாஹிர்,பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகவும், கடந்த 2009ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கும் 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில், பிறப்பித்த அரசாணை 354-ஐ அமல்படுத்தாதது அரசு மருத்துவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நியாயமான இந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கௌதமன் ஆஜராகி வாதிடுகையில், அரசாணை வெளியிட்ட அரசு அதை அமல்படுத்தாததால், கடந்த 11 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் பாப்பையா அவர்கள் இந்த வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதனையடுத்து 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படுமா? அமல்படுத்தப்படாதா? என பிப்ரவரி 3-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.