மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை மூடப்படுமா?- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை!
மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் காலையில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளித்து, மற்றநேரங்களில் மூட ஆலோசனை நடத்தவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 5,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் காலை நேரத்தில் நடைபயிற்சிக்கு மட்டும் பொதுமக்களை அனுமதித்து, மற்ற நேரங்களில் மூடலாமா என்பது குறித்து தலைமை செயலாளரிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறிய அவர், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், காசிமேடு உள்பட மீன் மார்க்கெட்டுகளில் விடுமுறை நாட்களில் அதிக மக்கள் கூடுவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.