ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட 24-ம் தேதி முதல் அனுமதி…!
ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடம், அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்ஜிஆரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நினைவிடத்தை திறந்துவைத்தார். இந்த நினைவிடத்தில் அறிவியல் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே நினைவுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நவீன அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் சாதனைகள் இடம்பெறுகின்றன. திரைப்படங்களில் நடித்தது முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பல்வேறு சம்பவங்கள், அவரது பள்ளி வாழ்க்கை வரலாறு போன்றவை திரையிடப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்ப வசதிகளை செய்வதற்கு பணிகள் நடந்து வருகிற நிலையில், 100 பேர் வசதியுடன் கூடிய ஆடிட்டோரியம் அமைக்கப்படுகிறது.
பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் பார்வையிட வந்தால் இந்த பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடம், அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.