ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் திருமணம் நடத்த அனுமதி….! 20 பேருக்கு மட்டும் அனுமதி..!
வருகிற 25-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கு முன் பதிவு செய்திருப்பவர்கள் வழக்கம்போல் திருமணங்களை கோவில்களில் நடத்தலாம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி முதல் அனைத்து நாட்களும் இரவு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் திருமணங்கள் நடக்க இருக்கின்றன. இந்த நாட்களில் கோவில்களில் திருமணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், வருகிற 25-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கு முன் பதிவு செய்திருப்பவர்கள் வழக்கம்போல் திருமணங்களை கோவில்களில் நடத்தலாம் என்றும், ஆனால் திருமணத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கொரோனா தடுப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவில் சார்பில் கை கழுவி கிருமிநாசினி வழங்கப்படும். உடல் வெப்பம் கண்டறியப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், திருமணத்துக்கு வருபவர்களும் திருமண அழைப்பிதழையும் கையில் கொண்டு வருவது நல்லது என்றும், அரசு பிறப்பித்துள்ள நடைமுறை விதிகளை பின்பற்றி திருமணங்களை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.