மரங்களை வெட்ட அனுமதி : கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் நன்றி …!

Default Image

பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது என்றும், இந்தக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த அனுமதி தங்களுக்கு உதவும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதியை வழங்கியமைக்காக கேரள அரசுக்கும், கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், தமது அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இது இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையில் அமையும் என்றும், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும், அணையின் கீழ்ப்பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகத்தின் உறுதிப்பாட்டை தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், வண்டிப் பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையைச் சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்குமாறு, தமிழ்நாட்டின் சார்பில் வந்துள்ள முக்கியமான கோரிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல இந்தச் சாலைப் பணிகள் மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்