கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் கூட்டமாக மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘விஜயகாந்த்’ மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு நினைவிடத்தில் காலை 9.30 மணிக்கு குரு பூஜை நடைபெற உள்ளது.
இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதனிடையே, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், தடையை மீறி மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து பேரணி வர தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.