மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Default Image

உலக தமிழாராய்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக் கலப்பின்றி தூய நடையில் எழுதியவரும், தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவரும், சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்ற தமிழறிஞருமான மறைமலை அடிகள் அவர்களைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அத்தகைய சான்றாண்மை மிக்க மறைமலை அடிகளார் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சிறப்பித்துப் போற்றும் வகையில், கடந்த 1997ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாக தமிழ்வானில் ஒளிவிட்டவரும், நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சீறியெழுந்த செந்நாப்புலவருமான செந்தமிழ் வித்தகர் – இனமான ஏந்தல் தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கவும், அவரது குடும்பத்தினருக்குக் காப்பு நிதி  வழங்கவும் ரூபாய் இருபது இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்து, தமிழுக்கும், மறைமலை அடிகளாருக்கும் சிறப்பு செய்தது இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழறிஞர் மறைமலை அடிகளார் அவர்களின் இளைய புதல்வர் திரு மறை பச்சையப்பன் அவர்கள் தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதையும், அவர் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வாடகைக் குடியிருப்பிற்குப் பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்த இயலாத நிலையில் உள்ளதையும் அறிந்த, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திரு. மறை பச்சையப்பன் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்தும், வாழ்நாள் முழுவதும் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் ஆணையிட்டுள்ளார்கள்.

அதோடு மட்டுமல்லாமல், திரு.மறை பச்சையப்பன் அவர்களின் மகன் திரு ப. சிவகுமார் அவர்கள் தற்போது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருவதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சிறப்பு நேர்வாக அவரது பணியினை நிரந்தரம் செய்திடவும் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்