ஆண்டுதோறும் 500 நியாயவிலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம் – அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் பதில்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும் 500 நியாயவிலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், மக்களின் தேவை என்பது அருகில் கடைகள் வரவேண்டும் என்றும் பேருந்துகள் அருகாமையில் வரவேண்டும் என்பதுதான்.
இந்த காலகட்டத்தில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதை பார்க்கிறோம். இதனை துறை அலுவலர்களுக்கு எடுத்து சென்று புதிய நியாய விலைக்கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். மேலும், ஆற்காடு தொகுதி புங்கனூர் ஊராட்சி எல்லாசிகுடிசை, வரதேசி நகர், விளாப்பாக்கம் பேரூராட்சி, சின்னதக்கை பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.