பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!
தமிழ் மொழியை குப்பை, சனியன் என கூறியவர் பெரியார். அவருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கும், பெண்ணுரிமைக்கும் பெரியாருக்கும் என சம்பந்தம் என கடுமையாக சாடியுள்ளார்.
சீமான் கூறுகையில், ” தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார், தமிழை சனியன் என்று சொல்லிய பெரியார் எந்த மொழியில் எழுதினார்?
எங்கள் மொழியையே நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறும் போது, அப்புறம் என்ன சமூக நீதி, சமூக அரசியல், சமூக மாற்றம் செய்தார் பெரியார்? அவரது அடிப்படையே தவறாக உள்ளது. உலகப் பொதுமறை நூலான திருக்குறளையே மலம் என்று கூறியவர் பெரியார்.
கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவர் ஆகியோரை எதிரி என்று குறிப்பிட்டவர் பெரியார். பிறகு எப்படி சமூக சீர்திருத்தம் மாறுதலை கொண்டு வந்தார் பெரியார்? அவர் எப்படி கொள்கை வழிகாட்டி ஆவார்? உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, உடன்பிறந்தவளுடனோ உறவு வைத்துக்கொள் என்று கூறியவர் பெரியார். அதுதான் அவர் கூறிய பெண்ணிய உரிமையா?
கள் இறக்க அனுமதியில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு, கள்ளுக்கு எதிராக தன் தோட்டத்தில் உள்ள ஆயிரம் தென்னை மரங்களை வெட்டினார் பெரியார். இதுதான் அவர் கூறும் பகுத்தறிவா? உலகத்தில் எந்த நாட்டுக்காரன் மது குடிக்கவில்லை? மது குடிக்க வேண்டாம் என்று கூறுவது, கட்டிய மனைவியோடு படுக்க வேண்டாம் என்று கூறுவது போல உள்ளது எனக் கூறியது பெரியார். சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்தது ஆணைமுத்து.” என்று பெரியார் பற்றி ஆவேசமாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்தை கூறியுள்ளார் சீமான்.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சீமானுக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் தங்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.