பேரறிவாளன் பரோல் நிராகரிப்பு – தமிழக அரசு தகவல்
ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி பேரறிவாளனுக்கு பரோல் கோரி அவரது தாய் அளித்த மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டது.
ராஜீவ் காந்தி கடந்த 1991 -ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது 7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே தான் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி, அவரது அம்மா அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்தவழக்கில் சிறைத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அந்த பதிலில், பேரறிவாளன் ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில்,பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 90 நாட்கள் பரோல் கோரிய வழக்கில் செப்டம்பர் 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.