மக்களின் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம்! – முதல்வர் உரை
மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
கள ஆய்வில் முதலமைச்சர்:
தென்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்விற்காக இன்று மதுரை சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், மதுரை, திண்டுக்கல், ராமநாதாபுரம், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்ட வளர்ச்சி பணி, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு:
அரசு திட்டப்பணிகளை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழங்கள், காய்கறி விவசாயம் தொடர்பான வசதிகள் தேனி மாவட்டத்திற்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் கள ஆய்வு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியர்கள் உறுதி செய்க:
மாநில முழுவதற்குமான அரசின் திட்டங்களை செயல்படுத்துவதுடன் மாவட்டத்துக்கென தனி திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்றார். அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆட்சியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாவட்டத்தின் தேவைகளை அரசுக்கு எடுத்து கூறி செயல்படுத்த வேண்டும். அரசு வகுக்கும் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும். தாங்கள் உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்று ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
காகிதம் அல்ல, கனவு:
மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். மக்களின் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல, கனவு. அதாவது, மக்களின் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார். அண்ணா மாறுமலர்ச்சி திட்டத்தை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இயன்ற அளவில் முயற்சிக்க வேண்டும்:
மேலும், 100 நாள் வேலை உறுதி திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டியது அவசியம். மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். பட்டா திருத்தும் கோரி மனு அளித்தால் குறிப்பிட்ட கால அளவிற்குள் நிறைவேற்றி கொடுங்கள், மக்களின் கோரிக்கைகளை இயன்ற அளவில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் எனவும் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தினார்.