மக்களின் குறைகள் தீர்க்கப்படும்.. எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை – முதலமைச்சர்

Default Image

அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது கூறுவது பற்றி கவலையில்லை என வெள்ள ஆய்வுக்கு பிறகு முதலமைச்சர் பேட்டி.

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சென்றுள்ளார். அங்கு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 44 செமீ கனமழை பெய்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சமயத்தில் மழையால் அதிக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

சீர்காழியில் ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. மக்கள் திருப்தியாக உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக 3 அமைச்சர்களை அனுப்பி வைத்தேன் என கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் நேரில் ஆய்வு செய்தேன், பணிகள் திருப்தியாக உள்ளன. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களுக்கு சில குறைகள் இருக்கின்றன, அவை விரைவில் தீர்க்கப்படும். அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது கூறுவது பற்றி கவலையில்லை. மக்கள் என்ன எதிர்பார்கிறார்களோ அதற்கேற்றவாறு கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்