மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

தமிழக உரிமைகளை தரவில்லை என்றால் மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

pm modi mk stalin

சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் பற்றியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாக திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள வெளியிடப்பட்டுள்ள பதிவில் ” நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது – பா.ஜ.க. ஆட்சியின் கையில் “நாடாளுமன்ற ஜனநாயகம்” எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி.

அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது – அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து – இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது.

ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா – இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும். இவ்வளவு களேபரத்திலும் – திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது – இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.

குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டும் நம் எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக எழுப்பிய அடுக்கடுக்கான திட்டங்கள் பற்றி இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன் என்று கூறி அதனையும் வெளியீட்டு இருக்கிறார்.

  • இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை.
  • இரயில்வே திட்டங்கள்.
  • மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு.
  • சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது.
  • விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை.
  • விவசாயிகளுக்கான பி-எம். கிசான் திட்டத்தின்கீழ் போதிய நிதி ஒதுக்காதது.
  • தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல்.
  • சுங்கச்சாவடிகளை ஒழித்தல்
  • நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை.
  • நீதித்துறையில் பன்முகத்தன்மை கோரிக்கை.
  • சிறுபான்மையினர் பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய கோரிக்கை.
  • சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நாடாளுமன்றக் கண்டனத் தீர்மானம்.
  • நீட் தேர்வு முறைகேடுகள்
  • வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு
  • தமிழ்நாட்டின் விமான நிலையத் திட்டங்கள்.
  • இந்திய சீன எல்லைப் பிரச்சினை பற்றி வெள்ளை அறிக்கை கோரியது.
  • சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத்.
  • பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை.
  • மதுரை எய்ம்ஸ்
  • நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி – தினக் கூலியையும் உயர்த்துவது.

இப்படி எண்ணற்ற திட்டங்களை – தமிழ்நாட்டின் உரிமைகளை – எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய கழக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக – தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் தி.மு.க.வின் தலைவர் என்ற நிலையில் நம் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் – எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதன் மூலம் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள்! இனியும் ஒன்றிய அரசு திருந்தவில்லை என்றால் – தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் – தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி” எனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu