அமைச்சர் பொன்முடி மீது சேற்றைவாரி இறைத்த பொதுமக்கள்! விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரத்தில் கனமழை பாதிப்பு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்தது.
விழுப்புரத்தில் சாத்தனூர் ஏரி முழு கொள்ளளவு எட்டிய நிலையில் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அதனால், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே, மழைநீரில் தங்கள் உடமைகளை இழந்து வாடும் கிராம மக்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் பொன்முடி மற்றும்அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கனமழை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது அமைச்சர் மீது சிலர் சேற்றை வாரி இறைத்ததாக கூறப்பட்டது. இதில் அமைச்சர் பொன்முடி மற்றும்அருகில் இருந்தவர்கள் சட்டைகளில் சேறு கறை படிந்தது.
ஆய்வு பணிகளுக்காக சென்ற அமைச்சர் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக அமைச்சர் பொன்முடி அங்கிருந்து தனது காரில் புறப்பட்டார்.