நான் சம்பாதித்த பணத்தில் மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினேன்-கமல்ஹாசன்
நான் சம்பாதித்த பணத்தில் மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்தார்.
அதேபோல் மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.பின்னர் 2019 மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திண்டுக்கல் மக்களவை தொகுதி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுதாகர், சின்னதுரை ஆகியோரை ஆதரித்து வத்தலகுண்டு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.அதில் அவர் பேசுகையில் , ஒரு நல்ல ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கப்பட்டது. இன்றைக்கு சில தொழில் அதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி விடுகின்றனர். ஆனால் நடிப்பு தொழிலில் நான் சம்பாதித்த பணத்தில் மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.