கோவைக்கு கனமழை எச்சரிக்கை : “மக்கள் பாதுகாப்பாக இருங்க”…மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் காரணமாக கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த சூழலில், அறிவுறுத்தல் கொடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077 மற்றும் 0422-2306051 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களின் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலே, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறு அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் நீர்நிலைகளில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் செல்பி (Selfie) எடுக்க செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆற்றங்கரைகள் மற்றும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதைப்போல, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.