ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது – பா.சிதம்பரம்
ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என ப.சிதம்பரம் ட்வீட்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பா.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது.
டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவ மனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேலுவுக்கு தெரியாமல் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை.’ என பதிவிட்டுள்ளார்.
அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது
ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை
— P. Chidambaram (@PChidambaram_IN) May 2, 2022