‘மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்’ … கள ஆய்வுக்குப பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சென்னை மாநகராட்சி சார்பில் காலை முதல் 2 லட்சதிற்கும் மேற்பட்டோருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை உட்பட பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், மையம் கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பிக்கள், மேயர் ப்ரியா ஆகியோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் புயலின் தாக்கத்தை குறித்தும் தமிழக அரசின் முன்னேற்பாடுகள் குறித்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “சென்னையில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை 110 மிமீ மழையானது பதிவகையுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பாதிப்பிகள் எதுவும் ஏற்படக் கூடாது என்பதற்காக போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் ஆங்காகே தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி வருகிறோம். அதற்காக 1700 மோட்டார் பம்புகள் உபயோகப்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், தீவிரமான காற்றின் காரணமாக 27 மரங்கள் முறிந்து விழுந்துள்ளது, அது உடனடியாக அகற்றப்பட்டிருக்கிறது. அதன் பின், 329 நிவாரண மையங்கள் அமைத்து அதற்கென உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 193 பேரை பத்திரமாக மீட்டு மையங்களில் தங்க வைத்துள்ளோம்.
120 சமையல் கூடங்கள் தயாரான நிலையில் உள்ளது. இதுவரையில் 2லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக வெள்ளம் அபாயம் ஏற்படும் பட்சத்தில் தாழ்வான மக்களை காக்க 103 படகுகள் தயார் நிலையில் இருக்கிறது. இன்று மீட்டுபு பணியில் மட்டும் சுமார் 22,000 பேர் உள்ளனர்.
இன்று நள்ளிரவு பொழுதில் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது. மக்கள் நீங்கள் அச்சப்பட வேண்டாம், புயல் தீவிரமாக கடக்க நேரிட்டாலும் திமுக அரசு அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. தமிழக மக்கள் பொறுப்போடும், விழிப்புணர்வோடும் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.