முதல்வர், ஆளுநருக்கு பொங்கல் பரிசாக ரூ.201 அனுப்பி நூதன போராட்டம்!
பொங்கல் பரிசாக ரூ.200 மட்டும் வழங்கப்பட்டதை தொடர்ந்து சமூக அமைப்பினர், புதுச்சேரி மாநில முதல்வர் மற்றும் ஆளுநருக்கு பொங்கல் பரிசாக ரூ.201-ஐ பரிசாக வழங்கினார்கள்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பரிசு விநியோக பணிகளை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதி நிறைவடையும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் சிவப்பு ரேஷன் அட்டைக்கு மட்டும் பொங்கல் பரிசாக ரூ.200-ஐ வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்கி வருவதாகவும், புதுச்சேரியில் ரூ.200 மட்டும் வழங்கியதை கண்டித்து, புதுவை சமூக நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் பொங்கல் பரிசாக ரூ.201 அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி அரசு ரூ.200 மட்டும் கொடுத்து மக்களை அவமதித்துள்ளதாகக் கூறி, அதனை விட ரூ.1-ஐ கூடுதலாக சேர்த்து முதல்வருக்கும், ஆளுநருக்கும் தலா 28 பேர் பொங்கல் பரிசாக ரூ.201-ஐ அனுப்பினார்கள்.