“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பரந்தூர் பகுதி மக்களை குறிப்பிட்டு நம்பிக்கையோடு இருங்கள். நாளை நமதே என விஜய் பதிவிட்டுள்ளார்.

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் அப்பகுதி கிராமத்தில் உள்ள விவாசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் 2 வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து பேசினார். தனியார் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது திறந்தவெளி வாகனத்தில் வந்து முதல் முறையாக மக்களை களத்தில் சந்தித்ததாக கூறினார். தனது கள அரசியல் பயணம் பரந்தூரில் இருந்து ஆரம்பித்துள்ளது என கூறினார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில், ” மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே! ” என பதிவிட்டுள்ளார்.