ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை கண்காணித்து விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது.
விதிகளை மீறினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது
தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியல் அமைப்பின்படி ஆளுநரின் கடமையாகும். சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதா, மாநிலத்தின் அதிகார வரம்பை மீறியதாக இருப்பதாக ஆளுநர் உணர்ந்தால், அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய சட்டப்பேரவைக்கு அவர் திரும்ப அனுப்பலாம்.
மறுபரிசீலனைக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என்றால், அந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்ததாக புரிந்துகொள்ள வேண்டும்.
மாநில சட்டமியற்றும் குழுவில் (state legislature)ஆளுநர் முதன்மையானவர். சட்டப்பேரவை, ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எனவே சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது சட்டமியற்றும் குழுவால் நிறைவேற்றப்பட்டது என்று பொருளாகாது.
ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தால்தான் சட்டமாகும். ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிலுவையில் வைப்பது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது ஆகிய மூன்றில் ஆளுநர் ஒன்றை தேர்வு செய்ய அரசியலமைப்பு அதிகாரம் கொடுக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை
நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் போராட்டம் செய்ய பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஆளுநரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.