தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Tamilnadu Election Polling

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இப்படியான சூழலில், தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவங்களிலும் வாக்காளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது தொடர்பாக வேங்கைவயல் மற்றும் இறையூர் பகுதி மக்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் இதுவரை வேங்கைவயல், இறையூர் பகுதி வாக்காளர்கள் வாக்கு செலுத்தவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விடுகல்பட்டிபுதூர் எனும் கிராமத்தில் 300 விவசாய குடும்பங்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் அப்பகுதி கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் திருப்பிய செலுத்திய பின்னரும் ரசீது தரவில்லை என்றும், அதனால் அடுத்தடுத்து கடன்கள் வாங்க முடியவில்லை என்றும், இது தொடர்பாக தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என கூறி தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு பகுதி கிராமத்தினர் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவ கழிவு தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அந்த தொழிற்சாலையால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

திருவண்ணாமலை செங்கம் அருகே மெத்தக்கல் எனும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி 16 ஆம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 500 வாக்காளர்கள் வாக்களிக்காமல் உள்ளனர்.

தென்காசி மாவட்டம் கே.கரிசல்குளத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக் கூறி சுமார் 1045 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். இதுவரை அப்பகுதி வாக்குச்சாவடியில் 10 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையை அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்த ஏகனாபுரம், நாகப்பட்டினம் கிராம மக்கள் இன்று மக்களவைத் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி எனும் கிராமத்தில் வீட்டுமனை நில பட்டா விவகாரம் தொடர்பாக தங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி இந்த மக்களவைத் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்