“மக்கள் எதிர்பார்க்கும், நல்லவைகள் நடந்தே தீரும்;இளைஞர்கள் படைக்கு பாமக ஆலோசனை வழங்கும்” – ராமதாஸ்!

Default Image

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும்,அவர்கள் எதிர்பார்க்கும்,ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும். அதை உறுதி செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை இளைஞர்கள் படைக்கு பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும்;வழிநடத்தும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு,புதிய பாதை,புதிய நம்பிக்கை,வெற்றிகளைக் குவிக்க உறுதியேற்போம் என்றும்,உறுதியான,குலையாத நம்பிக்கைகளுடன் 2022-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன.ஆனால்,அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது என்பது தான் கடந்த சில ஆண்டுகளில் நாம் கற்றுக் கொண்ட பாடம் ஆகும்.அதிலும் குறிப்பாக 2020-ஆம் ஆண்டும், 2021-ஆம் ஆண்டும் கொரோனா பரவலுடன் தொடங்கி,கொரோனா பரவலுடன் தான் நிறைவடைந்திருக்கின்றன.அதனால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களும், குறிப்பாக, ஏழை, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள்,சிறுதொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும்
மனதளவிலும்,உடல் அளவிலும்,பொருளாதார ரீதியாகவும் அடைந்த பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

2022-ஆம் ஆண்டும் மலர்ப்பாதை விரித்து நம்மை வரவேற்பதாகத் தெரியவில்லை.ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது.மனித உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் தீவிரமாக இருக்காது என்பதைத் தவிர, ஓமைக்ரானின் மற்ற அம்சங்கள் அச்சமளிப்பதாகவே உள்ளன.நம்பிக்கை தான் வாழ்க்கை.

2021ஆம் ஆண்டின் துயரங்கள் அனைத்து துரத்தி அடிக்கப்படும். அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம்.புத்தாண்டு நாம் விரும்பும் அனைத்தையும் நமக்கு அளிக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

தமிழ்நாட்டிற்கு நன்மை நடக்க வேண்டும்;தமிழ்நாடு இதுவரை அனுபவித்த தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்;வளர்ச்சியும்,அதனால் மக்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும் மட்டும் தான் இனிமேல் தமிழ்நாட்டின் அடையாளங்களாக இருக்க வேண்டும்.அதனால் தான் புத்தாண்டில் புதிய பாதையில், புதிய நம்பிக்கையுடன் பயணிக்க தீர்மானித்திருக்கிறோம்; இந்த பயணம் நமக்கு வெற்றிகளையே தரும்.

இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்;அவர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள். அவர்கள் ஒன்றாக கை கோர்த்து களமிறங்கினால்,தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும்,ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும். அதை உறுதி செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை இளைஞர்கள் படைக்கு பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும்;வழிநடத்தும்.

கடந்த இரு ஆண்டுகளில் நாம் அனுபவித்த விஷயங்கள் காரணமாக இந்த ஆண்டும் சோதனைகள் நிறைந்த ஆண்டாகவே இருக்கும் என்ற எண்ணம் பொதுவாக மக்களிடம் நிலவுகிறது.ஆனால், அதையும் கடந்து நம்மால் சாதிக்க முடியும் என்ற புதிய நம்பிக்கை தான் நமது வலிமை ஆகும். அதன் பயனாக 2022&ஆம் ஆண்டு இனிப்பாக அமையும்.அனைவருக்கும் அனைத்து நலன்களும்,வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்;அமைதியும்,நிம்மதியும் கிடைக்கும்;அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்