மக்களுக்கு பயம் போய்விட்டது.. சென்னையில் 1,000 தன்னார்வலர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் சிறார் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தொற்று பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது. சென்னையில் கொரோனா கட்டுப்பாடு பணிக்காக 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளன.
ஒரு வார்டுக்கு தலா 5 பேர் வீதம், 200 வார்டுகளில் தன்னார்வலர்கள் செயல்படுவார்கள். சென்னையில் நாள்தோறும் தொற்று கூடும் அச்சம் உள்ளது. தன்னார்வலர்களை மாநகராட்சியுடன் இணைத்து கோவிட் கேர் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அறை தொடங்கும். சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவ குழுவினருடன் டெலி கவுன்சிலிங் மையம் அமைக்கப்படும். சென்னையில் 35% மக்களே முகக்கவசம் அணிகின்றனர். பொதுமக்களுக்கு பயம் போய்விட்டது.
தொற்று ஏற்பட்டவர்கள் கார் ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா மையங்களுக்கு செல்ல ஏற்பாடு என்றும் சென்னையில் நாள்தோறும் பரிசோதனை அளவை 30,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு மாதத்திற்குள் 15- 18 வயது சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும். மத்திய அமைச்சர் உடனான கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தமிழ்நாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார்.