மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள் – முதல்வர் பழனிசாமி
கொரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் வைரஸின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீடிப்பதா அல்லது தளர்வு செய்யப்படுவதா என்ற ஆலோசனை மேற்கொண்டனர். இதனைக்குறித்து மே 3 க்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகின என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும், கொரோனா பரவலை தடுப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அப்போது, கொரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சி துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் காய்கறி சந்தைகளில் மக்கள் சமூக விலகலை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றின் தீவிரம் தெரியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை முழுமையாக தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள பங்கேற்றுள்ளனர்.