திமுக அரசு நீட் தேர்வை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை – ஈபிஎஸ்

Default Image

மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டு கொண்டே இருப்பது கொடுமை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடரும் அவலம் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த விடியா திமுக ஆட்சி என்று ஒழியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று வாய் நீளம் காட்டிய இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டு கொண்டே இருப்பது கொடுமையிலும் கொடுமை. அதிமுக ஆட்சியில் நீட்டை ஒழிக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன. திமுக ஆட்சி அமைந்த பின் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டது.

பயிற்சி மையங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தநோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. கல்வி என்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கான திறவுகோல், குறிப்பிட்ட படிப்புதான் நம் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்ற எண்ணத்தை மாணவச் செல்வங்கள் கைவிட வேண்டும் என்று ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வாஞ்சையோடு வேண்டுகோள் விடுக்கிறேன். விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, படித்து பட்டம் பெற்று முன்னேறுவோம் என்ற வைராக்கியத்தை மாணவச் செல்வங்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இனியும் இந்த விடியா திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை. “ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்” என்று வாய்ச் சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதற்கும், அவர்களை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களின் துயரத்திற்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப் பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்