அண்ணாமலை செயல் கேலிக்கூத்தானது., மக்கள் சிரிக்கிறார்கள்! ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
அண்ணாமலை சவுக்கால் அடித்து கொண்டதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். இது ஒரு கேலிக்கூத்து சம்பவம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6 முறை சவுக்கால் அடித்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு அணியமாட்டேன் என்றும் சபதம் எடுத்துள்ளார்.
இப்போராட்டம் குறித்தும் அண்ணாமலை சபதம் குறித்தும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், “யாராவது இந்த காலத்தில் சவுக்கால் அடித்து கொள்வார்களா? நான் 60 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எந்த தலைவரும் இப்படி செய்ததில்லை.
மணிப்பூரில் காவல்துறையினரே பல தவறுகளை செய்தனரே அப்போது இவர் இப்படி சவுக்கால் அடித்துக்கொள்ளவில்லையே? உத்திர பிரதேசத்தில் தினம் தினம் இதுபோல சம்பவம் நடந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அன்றாட சம்பவமாக இதுபோல பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறது.
அண்ணாமலை செய்த இந்த செயல் கேலி கூத்தாக இருக்கிறது. மக்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்கள் சிரிக்கிறார்கள். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பை அணியமாட்டேன் என அவர் கூறினாராம். அப்படி ஒரு சபதம் அவர் எடுத்திருந்தால், காலம் முழுக்க அவர் செருப்பே போட முடியாது. அது அவருடைய விருப்பம்.
அண்ணாமலையின் சவுக்கடி போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக அரசு பெண்களுக்கான அரசு. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசு. தலைவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் கேள்விபட்டவுடன், உடனடியாக துடித்து நடவடிக்கை எடுக்க சொன்னார். உடனே கைதானவரை திமுககாரன் என்று கூறுகிறார்கள். அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் உடன் யார் வேண்டுமானால் போட்டோ எடுக்க முடியும். அதனால் அவர் திமுக என எப்படி சொல்ல முடியும்?” என ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார்.