இவர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் – பேரவையில் அறிவித்த அமைச்சர்!
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு.
தமிழகத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.3,000 லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார். பேரவையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார். பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நெகிழி இல்லாத பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் நெகிழி இல்லா வளாகங்களை ஊக்குவிக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறினார். கடற்கரைக்கு நீலக்கொடி சான்று பெறுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நீலக்கொடி சான்று பெறுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.