சென்னையில் உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதித்தால் அபராதம், தொழில் உரிமம் ரத்து – மாநகராட்சி அதிரடி..!

Default Image

சென்னையில் உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும். 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 காலை 6.00 மணி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அண்டை மாநிலங்களிலும் மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2608 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 57 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2,21,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாமல் 50 சதவீதத்திற்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளுப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்