“ரஜினி அரசியலுக்கு வராததால் விஜய்யை களமிறக்கிய பாஜக?” – சபாநாயகர் அப்பாவு சந்தேகம்.!
ரஜினி அரசியலுக்கு வராததால் விஜய்யை பாஜக களம் இறக்கியுள்ளதா? என சபாநாயகர் அப்பாவு சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சென்னை : விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் திமுக குறித்து விஜய் பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகிறனர். அதாவது, திமுக தான் அரசியல் எதிரி.. பாஜக கொள்கை எதிரி என விஜய் வெளிப்படையாக பேசியிருந்தார்.
மேலும், “திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள், என்ன தான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப்போவதில்லை. திராவிட மாடல் என்ற பெயரில், பெரியார், அண்ணா பெயரில் நம்மை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநல கூட்டம் தான் நம் அடுத்த எதிரி, அரசியல் எதிரி” என விஜய் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், முதல் திமுகவில் இருந்து முதல் ஆளாக முக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் யார் கட்சி ஆரம்பித்தாலும், திமுகவை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், தவெக கருத்துக்கு திமுக உரிய பதிலடியை விரைவில் கொடுக்கும் என்றும் கூறினார்.
தற்பொழுது, விஜய் திமுக பற்றி பேசியதற்கு சபாநாயகர் அப்பாவு, “தமிழக வெற்றிக் கழகத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரோடு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் பத்திரிக்கை செய்திகளில் வருகிறது. பாஜகவின் முன்னணி தலைவரான அமித்ஷா உட்பட பலரிடம் நெருக்கமான உறவு கொண்டுள்ள புஸ்ஸி ஆனந்தை எப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக நியமித்தார்கள் என தெரியவில்லை.
பா.ஜ.க.வில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள், அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக தற்பொழுது விஜயை நிறுத்த ஏற்பாடு செய்து இருப்பார்களோ சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு நான் சொல்லவில்லை, பலரும் சொல்கிறார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், வருமான வரி சோதனையில் சிக்கியபோது விஜய்க்கு திமுகதான் ஆதரவு குரல் கொடுத்ததாகக் கூறினார். மேலும், மற்றவர்களை குறை சொல்லும் விஜய் உண்மையானவராக இருக்க வேண்டும் என்றார்.
தி.மு.க. பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும்போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். ஏ டீம் , பி டீம் இல்லை என சொல்வது தான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் கிரிமினல் என விஜய்யின் தந்தையே சொல்லி இருக்கிறார். ஒருவேளை கிரிமினல் தற்போது நல்லவராக மாறிவிட்டாரா என தெரியவில்லை”என கூறியுள்ளார்.