தமிழகத்தில் பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது – மு.க.ஸ்டாலின்..!
தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் பேராபத்தை விளைவிக்கும் ’பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை’ நடத்த பாஜக அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் பழனிசாமி அரசு இதனை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை” தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் களப்பரிசோதனை (Field Trial) செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்குத் திமுக சார்பில் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித குலத்திற்கும் – உயிரினங்களுக்கும் ஆபத்தான பி.டி. கத்தரிக்காய் – நம் மண்ணின் பாரம்பரிய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி – வேளாண்துறையில் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் அனைத்துத் தரப்பு விவசாயிகளிடமும் நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் திணிப்பது கண்டனத்திற்குரியது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போது குறிப்பாக 2010-ஆம் ஆண்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்யத் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை, தற்போது மத்திய பா.ஜ.க. அரசு மாற்றுகிறது.
பண்ணை ஒப்பந்தம் என்று கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக்க முயற்சிப்பது போல், “பி.டி. கத்தரிக்காய்” என்று அறிமுகம் செய்து பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் நடவடிக்கைக்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போகிறது.
மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றியோ அல்லது அவர்களின் நலன் பற்றியே கவலைப்படாத பொறுப்பற்ற போக்கு என்பதை விட, நம்மூர் விவசாயிகளுக்குக் கத்தரிக்காய் விவசாயத்தைக் கூட நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று கூறும் ஆணவப் போக்காகும்.
ஆகவே, தமிழ்நாட்டில் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வுக்கு” வழங்கியுள்ள அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். “மாநில அரசும் உரிய அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தக் கள ஆய்வை மேற்கொள்ள இயலும்” என்பதால் பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வினை தமிழ்நாட்டில் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது என்றுமுதலமைச்சர் பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.