இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,
தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாளை திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பவன் கல்யாணின் கட்சி பிரமுகர் கலந்து கொள்ள உள்ளார்.

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர், தமாகா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டு இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஒருமித்த எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்மைச்சர் கடிதம் எழுதினார். மேலும், நாளை (மார்ச் 22) நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மற்ற மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று இன்று காலையிலேயே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். அதே போல மற்ற கட்சி தலைவர்க்ளும் சென்னை வரவுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதில் முக்கிய திருப்பமாக, மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, தொகுதி மறுவரையறை தொடர்பான திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஜனசேனா கட்சி சார்பாக அக்கட்சி எம்பி உதய் சீனிவாஸ் நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்னை வரவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆளும் பாஜகவின் செயல்பாடுகள் மீது எதிர்ப்புகள் கொண்ட திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சி பிரமுகர் பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. மேலும், இது மாநில நலனுக்கானது என்பதால் கைகோர்த்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.