விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.! திருமாவளவன் அறிவிப்பு.!
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வரும் விசிகவின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டார்.
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். மேலும் கூட்டணி கட்சிகளான திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் , மமக, தமிழக வாழ்வுரிமை கட்சி என பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாடு தொடங்கியதும், விசிக தலைவர் திருமாவளவன் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டின் 12 தீர்மானங்களை மேடையில் வாசித்தார். அந்த தீர்மானங்கள், தேசிய அளவில் மதுவிலக்கு தேவை என்பதையும், தமிழக அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்….
- மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். அரசமைப்பு சட்டம் 47-ன் படி மதுவிலக்கு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
- மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும்.
- மதுவிலக்கு விசாரணை ஆணையத்தை மத்திய கொண்டு வர வேண்டும்.
- மத்திய அரசின் நிதி பகிர்வில் மது விலக்கு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களின் நிதி பற்றாக்குறை அறிந்து நிதி பகிர்வை செயல்படுத்த வேண்டும்.
- பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசு உரிய கால அட்டவணையை வெளியிட வேண்டும்.
- போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
- மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழுப்புணர்வு பரப்புரையில் மகளிர் சுய உதவி குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும். பொதுமக்களிடையே போதை பொருள் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கான பரப்பியக்கத்தை தமிழ்நாடு அரசு துவங்க வேண்டும்.
- தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை 2024 – 2025இல் மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ரூ.200 கோடியாக உயர்த்தப்பட வேண்டும்.
- மது நோயாளிகளுக்கு தமிழ்நாட்டில் மறுவாழ்வு மையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். மறுவால்வு மையங்கள் அனைத்து வட்டாரங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். குடி நோயாளிகளின் மறுவாழ்வுக்கு குறைந்தபட்சம்ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும். குடி நோயாளிகளுக்கு குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
- டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் பூரண மதுவிலக்கு நிறைவேற்றம் செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
- மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மட்டும் ஈடுபட்டால் போதாது. இதில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். இது அனைவரின் கடமையாகும்.
என மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்களை விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் குறிப்பிட்டார். பின்பு இந்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றம் செய்யப்பட்டன.