திமுக கூட்டணியில் தொகுதிகள் குறித்த விபரம் வெளியீடு!!வேட்பாளர்களை அறிவித்த கூட்டணி கட்சிகள்!!
- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் பின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படுவதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர்.பின்னர் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியானது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி ஆகும்.
மக்களவை தேர்தலில் ஈரோட்டில் மதிமுக போட்டியிடுகிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகும். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மற்றும் மதுரையில் போட்டியிடுகிறது.இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர் மற்றும் நாகையில் போட்டியிடுகிறது.நாமக்கலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது என்று திமுக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் முதலாவதாக வேட்பாளரை அறிவித்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகும்.
தொகுதி விவரத்திற்கு பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறோம் .அதுபோல் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில் மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு. வெங்கடேசனும் , கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.