தேமுதிக எந்த கட்சியுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை – பார்த்தசாரதி
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுக, பாஜக கட்சிகளுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இதுவரை இறுதியாகவில்லை. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுகவும், பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இதில் குறிப்பாக மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக இன்று தகவல் வெளியாகி இருந்தது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசியதாகவும், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
Read More – மக்களவைத் தேர்தல் : இறுதி கட்டத்தை எட்டியது அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை!
இதுபோன்று, தேமுதிக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால், யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேமுதிக எந்த கட்சியுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக, பாஜகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சி முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி பதிலளித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாருடனும் கூட்டணி குறித்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆலோசனை கூட்டத்தில் எங்கள் மாவட்ட செயலாளர்கள் திமுக கூட்டணிக்கு கூட போகலாம் என சொன்னார்கள். ஆனால், திமுகவில் அதிக கட்சிகள் கூட்டணியில் உள்ளது. இதனால், வாய்ப்பு இருந்தால் திமுகவோ, அதிமுகவோ எந்த கட்சி என்றாலும் நாங்கள் கூட்டணி வைப்போம் என்றார்.
மேலும், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்களவை தேர்தலில் கூட்டணியில் 14 தொகுதிகள் கேட்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் வலியுறுத்தப்பட்டது. இதனால், மக்களவை தேர்தல் கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து அவர் தான் முடிவெடுப்பார் எனவும் கூறினார்.