நாடாளுமன்ற தேர்தல்…நிர்வாகிகளுடன் ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை!!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தங்களது கட்சியின் நிர்வாகிகளுடன் வரும் 28-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கமல்ஹாசன் தலைமையில் “2024 பாராளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்” என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி 100 நாள் நடைபயணம் மேற்கொண்ட போது கமல்ஹாசன் அவருக்கு ஆதரவு தெரிவித்து நடைபயணத்தில் பங்கேற்றார்.
எனவே, வரும் 28-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.