3 மாத கைக்குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்…! என்ன காரணம்…?
குடும்ப வறுமையின் காரணமாக 3 மாத கைக்குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராம மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சரவணன்- மீனா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்காவதாக கர்ப்பமாக இருந்த மீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவருக்கு சுபஸ்ரீ என்று பெயரிட்டனர்.
இவர்கள் இருவரும் 4 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வளர்த்து ஆளாக்க போகிறோம் என்று ஆலோசித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பிறந்து 3 மாதங்கள் ஆன குழந்தையை வீட்டில் காணவில்லை. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்களிடம் குழந்தை எங்கே என்று கேட்டவுடன் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இவர்களது பதில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரை சந்தேகத்திற்குள்ளாக்கியது.
இதனையடுத்து கடந்த சில நாட்களாகவே அடையாளம் தெரியாத சிலர் சரவணனின் வீட்டிற்கு வந்து போவதாக இருந்தனர். அவர்கள் யார் என்று கேட்டபோது அவர்கள் உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையை குழந்தை சுபஸ்ரீ ரூ 1.80 லட்சத்துக்கு விற்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இது பற்றிய ரகசிய தகவல் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சரவணன் வீட்டிற்கு சென்ற போது, கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பீட்டிற்கு தப்பியோடியுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மாயமான சரவணன் – மீனா இருவரையும், போலீசார் அவர்களது உறவினர் வீட்டில் வைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது, வறுமையின் காரணமாக கோவையை சேர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்றதை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, போலீசார் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் மற்றும் குழந்தையின் பெற்றோர் சரவணன், மீனா ஆகியோரை கைது செய்துள்ளனர்.